மஹிந்த சமரசிங்க அமெரிக்காவில் களமிறக்கப்படுவது ஏன்?

சர்வதேச நெருக்கடிகளை சமாளித்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப்பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜதந்திர பொறிமுறையில் சில மறுசீரமைப்புகளையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இதன்படி மனித உரிமை விவகாரத்தை மையப்படுத்தி இலங்கைக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு அனைத்துலக மட்டத்தில் தலைமைத்துவம் வழங்கும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகமஹிந்த சமரசிங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியின்போது மனித உரிமை விவகாரங்களுக்கான சிறப்பு தூதுவராக செயற்பட்ட மஹிந்த சமரசிங்க, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்களில் பங்கேற்று, இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார். நல்லாட்சியின்போது மைத்திரியின் சிறப்பு பிரதிநிதியாக இவர் ஜெனிவா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடர்பில் பங்கேற்பதற்காக நேற்று நிவ்யோர்க் நோக்கி பயணமானார். அதற்கு முன்னர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

எனவே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பதவியேற்பதற்காக மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். அதன்பின்னர் தூதுவராக நியமனம் பெறுவார். மெக்சிக்கோவுக்கான விவகாரங்களையும் அவரே கையாள்வார் என தெரியவருகின்றது.

அதேவேளை, ஐ.நா.பொதுச்சபைக்கூட்டத்தொடரில் எதிர்வரும் 22 ஆம் திகதி உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கையால் முன்னெடுக்கப்படும் உள்ளக பொறிமுறைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கோருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles