இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டஉரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நமது பாராளுமன்றத்திலே இருக்கின்ற மூத்த அரசியல்வாதிதான் மஹிந்த ராஜபக்ச. பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமும் பாராளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்கு பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூர சிந்தனையை நாம் கண்டோம்.
நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ச ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஏனெனில், இந்த இரு வருட கால ஆட்சியையும் மகிந்தவின் ஒன்பது வருட ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையும் மடுவும் போல இருக்கின்றது. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மக்களின் வெறுப்பை மிகவும் விரைவாக சம்பாதித்த அரசாக இது மாறியுள்ளது. எதை எடுத்தாலும் இனவாதம், மதவாதமாக பார்க்கின்ற ஒரு நிலை.
இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சமத்துவம் என்ற தொனிப்பொருளைக் கொண்டுவந்து, “ஒரே நாட்டு ஒரே சட்டம்” என்று கூறினார்கள். இந்த நாடு ஒரே நாடே. இரு நாடுகள் அல்ல. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ஒரே நாடுதான். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சார்ந்த முஸ்லிம் சமூகமும் சகோதரச் சமூகங்களான சிங்கள, தமிழ் சமூகங்களும் இணைந்தி சுதந்திரத்துக்காகப் போராடி, அதை பெற்றுக்கொண்டோம்.
இந்த ஒரே நாட்டிலே முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் அவர்களுடைய தனித்துவக் கலாச்சார விழுமியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுபோல, தேச வழமை மற்றும் கண்டியச் சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இதனை அன்று தொடக்கம் எல்லோரும் அங்கீகரித்ததுடன் நீதிமன்றங்களிலும் அவை பிரயோகிக்கப்பட்டன.” – என்றார்.