” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் அதில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மண்கவ்வும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. ஏனைய எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியும் அதிகரித்திருப்பதை காணமுடிகின்றது.
அடுத்து மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அத்தேர்தலை அரசாங்கம் நடத்துமா என தெரியவில்லை. அவ்வாறு நடத்தப்பட்டால் அனைத்து சபைகளையும் எதிரணிகளே கைப்பற்றும்.
அதேவேளை, இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் பயணிக்க வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் ஆணைக்கு முரணாக அரசாங்கம் செயற்பட்டால் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை சுருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். “- என்றார் அஜித் பி பெரேரா.