மாகாணசபைத் தேர்தல் பற்றி அரசாங்கம் மௌனம் காத்துவருகின்றது. இதன்மூலம் தேர்தலை இழுத்தடிப்பதற்கு அது முயற்சிக்கின்றது என தெரிவதாக முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தல் என்பது மிக முக்கியம். மாகாணசபைத் தேர்தலானது நெடுகாலமாக நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமான சூழல் தற்போது உதயமாகியுள்ளது. அரசாங்கம் மற்றும் எதிரணிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அறிவதற்கு இது மிகச்சிறந்த ஜனநாயகக் கருவியாக அமையும்.
எனினும், மாகாணசபைத் தேர்தலைப் பற்றி ஆளுங்கட்சியினர் கதைப்பதே இல்லை. இதன்மூலம் அவர்கள் தேர்தலை நடத்த இழுத்தடிக்கின்றனர் என்பது புலனாகின்றது. நாட்டில் பொருளாதாரம் நல்லதெனில் அரசாங்கத்தின் ஆயுள் நீடிக்கும். எதிரணி பொதுமேடையொன்றை அமைக்கவே நாம் முயற்சித்துவருகின்றோம்.” – என்றார்.










