” மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் தமது கட்சி இன்னும் பேச்சு நடத்தவில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்து களமிறங்கும் என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு கூறினார்.
” மாகாண சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் பேச்சு நடைபெறவில்லை. அது தொடர்பில் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.” – எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
அதேவேளை ,தற்போதைய அரசை பலவீனப்படுத்துவதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும், ஐக்கிய தேசியக்கட்சி தரப்புடன் இணைந்து பயணிக்கும் திட்டம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.