மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தரப்பு தயாராகவே இருப்பதாக பிரதான அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா. முஸ்லிம் கட்சிகள் என்பனவே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளன.
மாகாணசபைகளுக்கான தேர்தலை பழைய முறைமையில் எதிர்வரும் ஜுனில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜுனில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான சட்டதிருத்தத்தை இம்மாதத்துக்குள் செய்தாக வேண்டும். எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான யோசனை முன்வைக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜுனில் தேர்தலை நடத்தினால் அதனை எதிர்கொள்வதற்கு தயாரா என பிரதான அரசியல் கட்சிகளிடம் வினவப்பட்டது.
“தேர்தல் என்பது ஜனநாயக உரிமை. அது உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டும். மக்கள் நீதிமன்றம் முன் எந்நேரத்திலும் ஆஜராகுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். பொதுத்தேர்தல் காலத்தின்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பிரச்சாரம் மேற்கொள்ள முடியும்.
அதேபோல நீதியான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கான களத்தை அரசு அமைத்துக்கொடுக்க வேண்டும். அரச இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகக்கூடாது. “ – என மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின்கீழா அல்லது தனித்தா என்பது குறித்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
அத்துடன், தமது கட்சி தனித்து களமிறங்கவே திட்டமிட்டுள்ளது எனவும், தேவையேற்படின் கூட்டணி அமைக்கப்படக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது என ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறினார்.










