மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலுக்கு இரண்டு வாரகாலத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தலை எக்காரணங்களுக்காகவும் பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என தெரிவித்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க ,எத்தேர்தல் முறைமையின் பிரகாரம் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என உறுதியான தீர்வு கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பல்வேறு காரணிகளினால் மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.தொடர்ந்து மாகாணசபை தேர்தலை பிற்போட இடமளிக்க முடியாது. பழையதேர்தல் முறைமையில் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய கலப்பு தேர்தல் முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதா என்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. இப்பிரச்சினைக்கு இரண்டு வார காலத்திற்குள் தீர்வை காண எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என ஆளும் தரப்பின் உறுப்பினர்களும், மதத் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எதிர்ப்புக்கான காரணத்தை தெளிவுப்படுத்தவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்திய மாகாணசபை முறைமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை அனைத்து மாகாணங்களிலும் மாகாணசபை முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளன.
மாகாண சபை முறைமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆராயப்படும். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற காரணத்தினால் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க முடியாது. மாகாண சபைகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றிற்கு தீர்வு காணப்படும்.
மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. மாகாண சபை தேர்தலை அரசாங்கம் பிற்போடுகிறது என்று விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சியினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாணசபை தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்படவில்லை. கட்சி ரீதியிலான முரண்பாட்டை அரசியல்வாதிகள் மாகாணசபை முறைமை ஊடாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் பலவீனமடைந்தன. இவ்விரு மாகாண சபைகளின் பலவீனத்தால் முழு மாகாண சபை முறைமையையும் பலவீனம் என கருத முடியாது. ஆகவே மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும் என்றார்.