இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதை தடை செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளமை வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும் என்று உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ராதாகிருஷ்ணன் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது என்பது கடந்த காலங்களில் ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இதன் காரணமாக பல மதத் தலைவர்களும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்றைய நிதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் மாட்டு இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஆனால் அது முறையாக நடைமுறைபடுத்தப்படவில்லை.
ஆனால் தற்பொழுது பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த முன்மொழிவை செய்திருக்கின்றமை வரவேற்கக் கூடிய ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.அதே நேரம் இறைச்சிக்காக பாவிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையும் ஒரு சிறந்த முன்னெடுப்பாகவே நான் பார்க்கின்றேன்.
ஏனெனில் ஒரு சட்டத்தை கொண்டு வருகின்ற பொழுது அது இன்னும் ஒரு சமூகத்தை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். அந்த வகையில் மாட்டிறைச்சி உண்பவர்களின் தேவைகளும் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதனை இறக்குமதி செய்து வரி விலக்கு அளித்து விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் இது வேறுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு வழி அமைக்கும்.
மேலும் எங்களுடைய நாடு உல்லாசத்துறையை நம்பி இருக்கின்ற நாடு என்ற வகையில் இங்கு வருகின்றவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
நீண்ட நாட்களாக தேசிய பிரச்சினையாக மாறியிருந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை வரவேற்க கூடிய ஒரு விடயமாகும் எனவும் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.