ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி பயிலும் 8 மாணவர்கள், பிரதி அதிபரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிலும் மாணவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த 08 மாணவர்களையும் தனது விடுதிக்கு மேற்படி பிரதி அதிபர் , பாடசாலை நிறைவடைந்தவுடன் பாடசாலை சீறுடையுடன் அழைத்து சென்று, விடுதியில் உள்ள வேலைகளை செய்யுமாறு பணிப்புரை விடுத்தமையினால் குறித்த மாணவர்கள் பிரதி அதிபரின் விடுதியினை சுத்தி பல்வேறு தொழில்களில் ஈடுபட்படுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அறிந்த பெற்றோர்கள், பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர் .
எனவே சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் குறித்து மத்திய மாகாண கல்வி தினைக்களத்தின் செயலாளருக்கும் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எட்டு மாணவர்களும் தொடர்ச்சியாக இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும், இதனால் மாலை 4 மணியளவிலேயே அவர்கள் வீடு செல்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்