மாத்தளை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் உரிய முறையில் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் பாரிய அளவில் குறைந்து வருகின்றது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைகளில் ஒதுக்கப்பட்டுள்ள 1360 கட்டில்களில் தற்போது இம்மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 300 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 ஆக காணப்படுகின்றது.
மேலும் இம்மாவட்டத்தில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான முதலாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத சுமார் 11 ஆயிரம் பேருக்கு சுகாதார தரப்பினரால் அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.