மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி!

மஹியங்கனை, மாபகதேவாவ பகுதில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக வயல் பகுதியில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 56 வயதுடையவர் மாபகதேவாவ மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாபகதேவாவ அகவத்தை பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக தினமும் மின்சார வயர்களை இழுத்து வந்த நிலையில், வயர் இழுக்கப்பட்ட அவ்வழியாக சென்ற இருவரில் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

மின் கம்பிகளை இழுத்த நபர் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜே.பலிபன மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.டபிள்யூ.சி.ஆர்.விஜேரத்ன ஆகியோர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles