நில நடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவ மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்றை உடனடியாக அனுப்ப வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
” மியன்மார் இலங்கையுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு நாடு. தேரவாத பௌத்தத்துடன் எங்களுக்கும் மியான்மருக்கும் பரஸ்பர நெருங்கிய உறவு உள்ளது.
தேரவாத பௌத்தர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு நாட்டில் இதுபோன்ற பேரழிவு ஏற்படும்போது, நாம் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.” எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நாங்கள் ஒரு நிவாரணக் குழுவை நேபாளத்திற்கு அனுப்பினோம். இந்தியாவிற்குப் பிறகு நேபாளத்திற்கு இரண்டாவது பெரிய உதவி நன்கொடையாளராக இலங்கை இருந்தது. சீனாவுக்கு முன்பே நாங்கள் அவர்களுக்கு உதவி செய்தோம்.
இன்று, இந்தியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளும், ஆஸ்திரேலியா, சீனா போன்ற தொலைதூர நாடுகளும் கூட மியன்மாருக்கு உதவி செய்கின்றன. அவ்வாறெனில் நாமும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எனவே, இலங்கை இராணுவத்தின் மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை உடனடியாக மியன்மாருக்கு அனுப்ப வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த குழுவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் மியன்மாரில் ஒரு தற்காலிக மருத்துவமனையை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.










