மியன்மாரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மியன்மாரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது.
ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணர்ந்தது. வங்கதேசம், இந்தியா, லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.