மீண்டும் போர்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை!

ஹமாஸ் அமைப்பு எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் , போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு இடையே 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் போர் நடைபெற்றுவருகின்றது.

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டி, பிணைக்கைதிகள் விடுவிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்தே ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமைக்குள் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹமாஸ் அமைப்பு இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை இராணுவம் தீவிர சண்டையில் ஈடுபடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Articles

Latest Articles