மீதும்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை பசறை பொது சுகாதார பரிசோதகர்கள் அதிகாரிகள் விசேட சோதனைக்கு உட்படுத்திய வேளையில் பொது சுகாதார பரிசோதக உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரின் மகன் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று(16) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; மீதும்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தக நிலையத்தில் உள்ள களஞ்சிய அறையில் மக்கள் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் களஞ்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும்அதனை பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த களஞ்சிய அறையை சோதனைக்காக திறக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் மகன் திடீரென பொது சுகாதார அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
திடீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுகாதார அதிகாரி பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன் அவரை இன்று பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள பொது சுகாதார பரிசோதக சங்கத்தினர் சந்தேக நபருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.