நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கத்தின் பெய்த கடும் மழையின் காரணமாகவும் கடந்த 28ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்றினால் பசறை மீதும்பிட்டிய பகுதியில் உள்ள டெமேரியா தோட்ட “ஏ”மற்றும் “சீ” பிரிவுகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.
கடும் காற்றின் காரணமாக இப்பகுதியில் உள்ள சுமார் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 9 வீடுகளின் கூரைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மீதும்பிட்டிய “சீ” பிரிவிற்கு செல்லும் பாதையில் பாரிய மரங்கள் 2 வேரோடு சாய்ந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த பகுதியில் தடைப்பட்டிருந்த வாகனப் போக்குவரத்து மரங்களை வெட்டி அகற்றியப் பின்னர் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
பதுளை- கொழும்பு புகையிரத சேவை பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்று வருகிறது. தெமோதரை மற்றும் உடுவரை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத கடவையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை அகற்றும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.இன்னும் ஓரிரு நாட்களில் பதுளைக்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் என புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் மழையினுடனான வானிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில் இன்றும் பரவலாக மழையுடன் வானிலையே காணப்படுகின்றது.
பசறை நிருபர்