முகக்கவசம் அணியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்று முதல் முகக்கவசம் அணியாத மற்றும் முறையாக முகக்கவசம் அணியாத நபர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலும் பொலிஸார் விசேட கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் நேற்று 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 52,000 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 46,000 க்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6, 000 பேருக்கு எதிராக எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. தனிமைப்படுத்தல் தொடர்பான கண்காணிப்புக்கள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்துக்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் 13 இடங்களில் 4,120 வாகனங்களில் பயணித்த 7,644 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட 99 வாகனங்களில் பயணித்த 150 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles