முகநூலில் பதறாது களத்தில் இறங்கவும் – சிவநேசனுக்கு இதொகா இளைஞரணி பதிலடி

“ காலாவதியான இளைஞர் அணி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு முகநூலில் பதறுவதை விடுத்து சற்று வெளியில் வந்து பாருங்கள்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் இ.தொ.கா இளைஞர் அணி பொதுச் செயலாளர் ரமேஸ்குமார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு அதிகப்படியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததோடு எம் மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொடுக்க முழுமையாக களத்தில் செயற்பட்டது அமைச்சர் ஜீவன் தொண்டமானாகும்.

காலாவதியான இளைஞர் அணி தலைவர் பதவியை வைத்துக்கொண்டு முகநூலில் பதறுவதை விடுத்து சற்று வெளியில் வந்து பாருங்கள். 10000 வீடுகளுக்கு ஒரே நாளில் அடிக்கள் நாட்டினோமா? உங்களைப்போல், யாரும் வீடுகளை கட்டிவிடுவார்கள் எனும் அச்சத்தில் அவசர அவசரமாக நாம் அடிக்கல் நாட்டவில்லை, கட்சி மற்றும் தொழிற்சங்க பேதம் பார்த்து வீடுகள் வழங்கவில்லை, எமது கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்களை புறக்கணிக்கவில்லை, தோட்டத்தில் பிறந்தாலே வீடு எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதே எமது வீட்டுத்திட்டம்.

நாம் ஆடம்பர அரசியலுக்காக வீடுகள் கட்டவில்லை, மாறாக நில உரிமையுடன் கூடிய முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளையே மக்களுக்கு கையளிக்க விரும்புகின்றோம். அதுமட்டுமல்லாமல் நீங்கள் அறைகுறையாக கட்டிய மற்றும் அடிக்கல் நாட்டிய வீடுகளையும் பூரணப்படுத்தி மக்களுக்கு முறையாக கையளித்துள்ளோம். இதற்காகவே அதிகபடியான நிதி செலவுசெய்யப்பட்டுள்ளது.

வீராப்பு அரசியலுக்கு கூஜா தூக்காது செயற்பாட்டு அரசியலை மலையகத்தில் முன்னெடுங்கள், ஏனைய இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குங்கள்.

தேர்தல் நெருங்குவதால் உங்களது புலம்பல்கள் இவ்வாறு சமூக ஊடகங்களில் வருவது வழக்கம் தான் ஆனால் யதார்தத்தை புரிந்துக்கொள்ளாமல் புராணம் பாடுவது ஆரோக்கியமல்ல. நியாயமான விமர்சனங்கள் ஏதாவது இருந்தால் முன்வையுங்கள், மக்களுக்கு ஏதாவது செய்ய முயற்சியுங்கள்.” – என்றுள்ளது.

 

Related Articles

Latest Articles