முடக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பது குறித்து நாளை மீளாய்வுக் கூட்டம்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் நாளை (14) முடிவெடுக்கப்படும் – என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (13) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பது தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நாளை நடைபெறும். இதன்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள, வைரஸ் பரவும் அபாயம் நீங்கியுள்ள பகுதிகளை விடுவிக்கும் முடிவு எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் பிறப்பிப்பதற்கோ அல்லது மேலும் பல பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கோ நாம் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் மக்களின் செயற்பாடுகளில்தான் அடுத்தக்கட்ட முடிவகள் தங்கியுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை 15 ஆம் திகதி நள்ளிரவுடன் தளர்த்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதனை நீடிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் அடுத்துவரும் 48 மணிநேரத்தில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை அடிப்படையாகக்கொண்டு முடிவுகள் மாறலாம்.”   – என்றார்.

Related Articles

Latest Articles