பண்டிகைக் காலத்தில் முட்டை விலை ரூ.80க்கு மேல் உயரக்கூடும் என அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி, தற்போது அதீத விலையினால் முட்டைக்கான தேவை குறைந்துள்ளதாக தெரிவித்தார். எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் போது முட்டையின் விலை அதிக சதவீதத்தில் உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“உணவுப் பொருட்களின் விலையேற்றம் உணவுப் பாதுகாப்பை பாதித்துள்ளது, இதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
புரதம் சத்து கொண்ட விலங்கு உணவுப் பொருட்களின் விலை சாமானியர்களுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. விலங்கு உற்பத்தி மற்றும் விலங்கு புரதத்திற்கான தேவையை பூர்த்தி செய்யத் சுகாதாரத் துறை தவறிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்த பேச்சு வார்த்தைகளை மட்டுமே நடத்துகின்றனர்,” என்றார்.
அதிகரித்து வரும் மின் நுகர்வுக் கட்டணங்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் விலை உயர்வு ஆகியவை உணவுப் பாதுகாப்பை பாதித்துள்ளதாகவும், வரும் காலங்களில் இது மேலும் மோசமாகும் என்றும் அவர் கூறினார்.










