உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.