முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருன கமகே தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர், இதற்கு முன்னரும் அதே இராணுவ முகாமுக்குள் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அத்துமீறி நுழைந்துள்ளார். பொருட்களை களவாட முற்பட்டமை தொடர்பில் அவருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அவர் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளார். இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து தப்பியோடிய குழுவில் இருந்த ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்பது சம்பவம் நடைபெற்று மறுநாளே எமக்கு தெரியவந்தது. அவரின் மரணத்துக்கு இராணுவம் காரணமில்லை என இராணுவ தரப்பின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாம் ஒரு தலைபட்சமாக விசாரணை நடத்தவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. எதிர்காலத்திலும் வழங்கப்படும்.” – என இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.