பசறை எல்டப் கிகிரிவத்தை 18 ஆவது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மரத்திலான மின்கம்பம் முறிந்து விழும் பாரிய அபாய நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக கடிதம் மூலம் பசறை மின்சார சபை காரியாலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும், பல தடவைகள் நேரில் சென்று இலங்கை மின்சார சபை அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும், எனினும், மின்கம்பத்தை மாற்றுவதற்கான எதுவித நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக குறித்த மின்கம்பம் எந்நேரத்திலும் முறிந்து விழக்கூடும் எனவும், முறிந்து விழுந்தால் லயன் குடியிருப்பின் மீதே விழும் எனவும் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
இது தொடர்பில் மலையக அரசியல் வாதிகள் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட மின்சார சபை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து குறித்த மின்கம்பத்தை மாற்றி தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, உடனடியாக மின்சார சபை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து குறித்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ராமு தனராஜா










