முல்லை. இளம் குடும்பஸ்தரின் சடலம்: உடற்கூற்றுப் மாதிரிகள் கொழும்புக்கு

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் கடந்த 7ஆம் திகதியன்று  இராணுவத்தால் தாக்கப்பட்டுக் காணாமல்போனதாகத் தேடப்பட்டு வந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தரே நேற்று சனிக்கிழமை முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் முன்னிலையில் சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிஸாரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்துக்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.

Related Articles

Latest Articles