நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சில விடயங்கள் உள்ளன. எனவே, அவற்றை இல்லாதொழித்து ஒற்றையாட்சியை அடிப்படையாகக்கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஆளுங்கட்சி எதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கோருகின்றது, அதனை பெறமுடியுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நாம் ‘சேட்’ ஒன்றை வாங்கியிருந்தோம். 19 தடவைகள் கிழிந்த இடங்களை தைத்து பாவித்துவிட்டோம். அவ்வாறு தைத்த இடங்களும் கிழிய ஆரம்பித்தால், புதிய “சேட்டை’ வாங்குவதே சிறந்த தேர்வாக இருக்கும்.
19 தடவைகள் திருத்தப்பட்டுள்ள எமது நாட்டு அரசியலமைப்பில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சில விடயங்களும் உள்ளன. அவற்றை நீக்குவதற்கும், அனைத்து இன மற்றும் மத மக்களை சமமாக வாழ வைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை ஒற்றையாட்சிக்குள் உருவாக்குவதற்கும் புதிய அரசியலமைப்பு அவசியம். இதற்கு தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்குவார்கள். இதற்கு அஞ்சியே எதிரணிகள் கூச்சலிடுகின்றன.” – என்றார்.