ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது முதலாவது ஜனநாயக பலப்பரீட்சையை எதிர்வரும் மே 06 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
யாழ்., மற்றும் கொழும்பு மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்குரிய தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, பாதீடுமீது நேற்று இறுதி வாக்கெடுப்பு முடிந்த நிலையில் , நாளை முதல் பிரச்சாரப் போரில் பிரதான அரசியல் கட்சிகள் களமிறங்கவுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றி வெற்றிநடைபோட்ட தேசிய மக்கள் சக்தி, குட்டி தேர்தலிலும் தமக்கே வெற்றியென நம்புகின்றது.
எனினும், பொருட்கள்மீதான விலை குறைப்பு உள்ளிட்ட விடயங்களில் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.
அதேபோல ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், வெளிநாட்டில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் உள்ளிட்ட விடயங்களில் கூறப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முறையாக செயல்படவில்லை எனவும், எனவே, தமிழர் தாயகத்தில் இம்முறை வெல்ல முடியாது எனவும் தமிழ்க் கட்சிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு சில அதிருப்தி அலைகளும், சில சவால்களும் தேசிய மக்கள் சக்திக்கு இருப்பதால் பொதுத்தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியை குட்டி தேர்தலில் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
வாக்கு வங்கி சரிந்தால் அது எதிரணிக்கு அரசியல் அஸ்திரமாக அமையக்கூடும் என்பதால் இத்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு அநுர அரசு முழு வீச்சுடன் செயல்படும்.
அதேபோல தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு எதிரணிகளும் போராடும்.
வடக்கு, கிழக்கில் பொதுத்தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டம்தவிர ஏனைய மாவட்டங்களை என்பிபி கைப்பற்றியது. எனவே, குட்டி தேர்தலிலும் வெற்றியை தக்கவைப்பதற்குரிய வியூகமும் வகுக்கப்பட்டுவருகின்றது.
