மே – 09 சம்பவத்தின் வலியை – 83 இல் அனுபவித்துவிட்டோம்

நாட்டில் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரே பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதன் வலி தெரிகின்றது. ஆனால் 39 வருடங்களுக்கு முன்னரே இந்த வலியை அனுபவித்தவர்கள் நாம் என பழனி திகாம்பரம் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.இடம்பெற்ற அசம்பாவிதத்தில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன .இத்தகைய வேதனையை அவர்கள் இப்போதுதான் உணருகின்றனர். ஆனால் வீடுகள் எரிக்கப்படும் வேதனையின் வலியை 39 வருடங்களுக்கு முன்பே எமது மக்கள் அனுபவித்தனர்.1983 ஜூலை கலவரத்தை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம்.தமிழ் மக்களின் வீடுகள்,கடைகள் எரிக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு அவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.அதற்காக இந்த சம்பவத்தை நாம் ஆதரிக்கவில்லை. கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

வீடுகளை எரித்தவர்களுக்கும் அலரி மாளிகைக்கு வருகை தந்த மக்களை தூண்டிவிட்ட அமைச்சர்கள் மற்றும் ஏனையவர்களுக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

Related Articles

Latest Articles