மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோஹ்லி – காம்பீருக்கு அபராதம்

பெங்களூர் மற்றும் லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கொஹ்லி மற்றும் கெளதம் காம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு லக்னெளவில் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னெள சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 126 ஓட்டங்கள் எடுத்த நிலையில், லக்னெள அணி 108 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் இரண்டாவது பாதியின் போது கொஹ்லி மற்றும் ஆப்கனைச் சேர்ந்த லக்னெள வீரர் நவீன் உல் ஹக் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது மீண்டும் கோலி – நவீன் இடையே மோதல் ஏற்பட, லக்னெள ஆலோசகர் கம்பீர் குறுக்கிட்டார். தொடர்ந்து, கம்பீரும் கொஹ்லியும் மோதிக் கொண்ட நிலையில் சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இதன்போது அமித் மிஸ்ரா, டூப்பிளெசிஸ், லக்னெள துணைப் பயிற்சியாளர் விஜய் தய்யா, நடுவர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கிவிட்டனர்.

இந்த மோதலை தொடர்ந்து, கொஹ்லி மற்றும் கம்பீருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 100 வீதமும், நவீனுக்கு 50 வீதமும் அபராதமாக விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்ட அறிக்கையில் ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளின்படி இரண்டாம் நிலை குற்றம் புரிந்ததாக இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக இருந்த கம்பீரும், ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இருந்த விராட் கொஹ்லியும் மைதானத்தில் மோதிக்கொண்டனர். அதன்பின் இப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles