மைத்திரி அணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தேவையேற்படின் தமது அணியுடன் இணைந்து பயணிக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக்கட்சி அதிருப்தியில் இருக்கின்றது. எனவே, அக்கட்சி உறுப்பினர்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் எண்ணம் உள்ளதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எரான் விக்கிரமரத்ன எம்.பி. இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தி என்பது எமது கட்சி.  ஐக்கிய மக்கள் முன்னணி என்பது எமது கூட்டணி. எனவே, எமது கட்சியின் கொள்கையுடன் ஒத்துபோகக்கூடிய எந்த கட்சியும், அமைப்புகளும், நபர்களும் இணைந்து பயணிக்கலாம். கதவுகள் திறந்தே உள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சிமீதான அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சிகூட வரலாம். ஆனால் எமது கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.” – என்றார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மேளனத்தில் ஏன் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என எழுப்பட்ட கேள்விக்கு,

” பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், கூட்டம் பதுளையில் நடைபெற்றதால் அவர்களால் பங்கேற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மற்றும்படி எவ்வித பிரச்சினையும் இல்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles