மக்கள் எழுச்சியால் முடங்கிய ராஜபக்சக்களை, அரசியல் ரீதியில் மீள் எழுச்சிகொள்ள வைத்து – அவர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் நகர்வுக்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.
இதன் ஓர் அங்கமாக மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாவலப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு சமாந்தரமாக மொட்டு கட்சி செயற்பாட்டாளர்கள் பயணித்த வழிகளில் ஆங்காங்கே புல்லும், புண்ணாக்கும் வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.
‘ஒன்றாக எழுவோம்’ எனும் தொனிப்பொருளிக்கீழ் தொகுதி வாரியாக மக்கள் கூட்டங்களை நடத்தி, மக்கள் மத்தியில் மீள காலூன்றுவதற்கான நடவடிக்கையில் மொட்டு கட்சி இறங்கியுள்ளது.
முதலாவது கூட்டம் களுத்துறையில் நடைபெற்ற நிலையில், 2 ஆவது கூட்டம் நேற்று நாவலப்பிட்டியவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் நாவலப்பிட்டிய நகரில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மக்களும் பங்கேற்றிருந்தனர்.
எனினும், பேரணியை தொடர்வதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இரு தரப்புகளின் அரசியல் நடவடிக்கை இடம்பெறுவதால் சட்டம், ஒழுங்கு பாதிக்கும் என கருதி தடை விதிக்கப்படுகின்றது என பாதுகாப்பு தரப்பால் அறிவிக்கப்பட்டது.
நகரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸ் தடையைமீறி போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்ல முற்பட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இறுதியில் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் பக்கச்சார்பாக செயற்பட்டனர் எனவும், நீதிமன்ற அனுமதியின்றி கைது இடம்பெற்றுள்ளது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.










