ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், சின்னம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையால் இணக்கப்பாட்டை எட்டுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இரு தரப்பும் ஒரு கூட்டணியாக இணையும் பட்சத்தில் உள்ளாட்சிசபைத் தேர்தலை யானை சின்னத்தில் எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்க மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னமே கூட்டணியின் சின்னமாகவும் இருக்க வேண்டும் எனவும் தற்போதுகூட ஐக்கிய மக்கள் கூட்டணியின் சின்னமாக தொலைபேசியே உள்ளது எனவும் இடித்துரைத்துள்ளது.
இதனையடுத்து பொதுசின்னம் தொடர்பான யோசனை ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் சஜித் அணி இணக்கம் தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலில் பொதுசின்னத்தை பரிசீலிக்கக்கூடாது எனவும், அடுத்த தேசிய தேர்தலை இலக்கு வைத்து பொதுசின்னம் பற்றி பரிசீலிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இரு தரப்பு பேச்சு இழுபறி நிலையை நோக்கி நகர்வதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.