” நாட்டின் நலன்கருதி ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்படும். நாட்டுக்கு இரு தரப்பு கூட்டணி அவசியமெனில் அதனை செய்வதற்கும் நாம் தயார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியும், மொட்டு கட்சியும் கூட்டணி அமைக்கவுள்ளன என்று வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பிரதான கட்சி என்ற அடிப்படையில், ஐதேக தலைவரை ஜனாதிபதியாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். இந்த ஒத்துழைப்பால் இரு கட்சிகளுக்கும் இடையில் தற்போது சிறந்த உறவு ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகளுக்கும் கொள்கைகள் உள்ளன. எனவே, அவை பாதிக்காத வகையில் பயணம் தொடரும். நாட்டின் நலனுக்காக தற்போது இணைந்துள்ளோம். எவ்வளவு தூரம் முடியுமோ அந்த அளவுக்கு பயணம் தொடரும்.
ஐக்கிய தேசியக்கட்சி பழமையான கட்சியாகும். கிராம மட்டத்தில் கட்டமைப்பு உள்ள கட்சியாகும். எனவே, இணைந்து பயணிப்பது எமக்கு பலமாக அமையும். நாட்டு நன்மைக்காகவே நாம் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே, எமக்கிடையிலான கூட்டணிக்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை. சாத்தியம் எனில் பின்வாங்க போவதும் இல்லை. முதலில் பேச்சுகள் இடம்பெற வேண்டும். நாட்டுக்கு நன்மையெனில் நிச்சயம் கூட்டணி உருவாகும்.” – என்றார்.