யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இரண்டு தரப்பினருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் நாளை (13) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, பொன்னாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியரை கடத்திச்சென்றவர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கணவரை கொலை செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பகுதியில் கணவனும் மனைவியும் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கணவருடன் ஏற்கனவே கருத்து முரண்பாட்டைக் கொண்டிருந்த சிலர் காரில் அவர்களை பின்தொடர்ந்துள்ளனர்.
இதனையறிந்து, மோட்டார் சைக்கிளை திருப்பி வேறு திசையில் பயணத்தை தொடர்ந்துள்ளனர். எனினும், காரில் பின்தொடர்ந்து வந்தவர்கள் தம்பதியை மோட்டார் சைக்கிளுடன் கடத்திச்சென்று, மனைவியை யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் இறக்கி விட்டுள்ளனர். கடத்தப்பட்டவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, மாவடியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 24 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.