யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவர் நேற்று முன்தினம் (11) கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இறுதிக்கிரிகைகள் இன்று நடைபெற்றன.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ள நிலையில், இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஐவரும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு தரப்பினருக்கு இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக கொலைச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நால்வரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
எனினும், 5 ஆவது சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.










