கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையமானது அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படவில்லை. மாறாக வெளிநாட்டு முதலீட்டுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
குறித்த மின் திட்டத்தில் 40 வீத பங்குகளே வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும், 15 வருடங்களுக்கு பிறகு அதன் உரிமம் முழுமையாக இலங்கை வசமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மின்திட்டத்தின் நன்மைகள் தொடர்பில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உண்மை தன்மையை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் சாகர சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பில் இன்று மகாநாயக்க தேரரிடமும் முறையிட்டுள்ளது.
