“இது எமது நாடு, எமக்கு தேவையானவற்றைதான் செய்தோம். ஐ.நா. அல்ல யார் என்ன சொன்னாலும் நான் அமைச்சராக இருக்கும்வரை எமது திட்டத்தை கைவிடப்போவதில்லை.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான டிரால் அலஸ்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ போதைப்பொருள் விற்பனை மற்றும் பாதாள குழு செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது ஏழு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவு, இத்திட்டத்தை செயற்படுத்துவதற்காகவே பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தேன். போதைப் பொருள் வியாபாரமும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளும் அப்படியே தொடர்ந்திருந்தால் இலங்கை சிகாகோ போல் ஆகியிருக்கும். ஜுன் 30 ஆம் திகதி ஆகும்போது பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
சர்வதேசத்தில் இருந்து அழுத்தம் வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்கின்றது. யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு அறிக்கை விடுக்கப்படுகின்றது. இது எமது நாடு, எமக்கு தேவையானவற்றைதான் இங்கு செய்வோம், எனவே, ஐ.நா., சர்வதேசம் சொல்வதால் எமது நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை.” – என்றார்.










