ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் மலையக மக்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். எனவே, மலையக மக்கள் அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அத்துடன், சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு மலையக மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணத்தைக்கூற முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் செய்வோம் என பம்மாத்து காட்டாமல், தீர்வை அடைவதற்குரிய வழிமுறைகளை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் வேலுகுமார் கூறியவை வருமாறு,
” அடுத்த ஐந்தாண்டுகளில் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார். முடியும் எனக் கருதும் விடயங்களை உரிய வழிகாட்டலுடன் அவர் முன்மொழிந்துள்ளார்.
ஆனால் ஏனைய வேட்பாளர்கள் வாக்கு வேட்டைக்காக தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்துள்ளனர். அவை நடைமுறை சாத்தியமற்ற விடயங்களாகும்.
ஜனாதிபதியின் ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் மலையக மக்களுக்கான சூரிய உதயத்தைக் காண்கின்றோம். நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களுக்காக முன்னெடுத்த திட்டங்களை தொடர்வதற்குரிய உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
காணி உரிமை, தனிவீடு, புதிய கிராமங்கள் உருவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் எல்லாம் உள்ளன. இது சம்பந்தமாக நாம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினோம். அதன்பலனாக வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல அலைகள் உருவாகி இருந்தன. அவை எல்லாம் ஓய்ந்து தற்போது ரணில் அலை வீசத்தொடங்கியுள்ளது. எனவே, நாடும் நாமும் முன்னேற ரணிலுடன் இணைந்து பயணிப்போம்.
மலையக அதிகார சபை, பிரதேச செயலக அதிபரிப்பு உள்ளிட்ட உரிமைசார் விடயங்கள் ஜனாதிபதி ரணில் பிரதமராக இருந்தபோது செய்யப்பட்ட விடயங்களாகும். மலையக மக்கள் ரணிலுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. ஆனால் சஜித், அநுர ஆகியோருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம்கூட இல்லை.” – என்றார்.