தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக்கொடுத்து அவரை பலப்படுத்தும் நோக்கிலேயே தனி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்திருக்கக்கூடும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதவு வழங்குமாறுகோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது. மொட்டு கட்சியின் சார்பில் தனி வேட்பாளர் களமிறக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
பலவீனமான ரணிலை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது பலவீனமான ரணிலை பலப்படுத்தும் நோக்கில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
தமிழீழத்துக்காக குரல் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தடையாக இருக்கும் ஒரே காரணி, ராஜபக்சக்கள் அரசுடன் இருப்பதாகும்.
அதேபோல கொரோனா காலத்தில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்த ராஜபக்சக்கள் அரசாங்கத்தில் இருப்பதுதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு சில முஸ்லிம் கட்சிகளுக்கு தடையாக உள்ள காரணியாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கு மீள ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்வதற்கு தடையாக இருக்கும் காரணி, ராஜபக்சக்கள் அரசுடன் இருப்பதாகும். எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில்கூட ராஜபக்சக்கள் இந்த முடிவை எடுத்திருக்ககூடும்.” – என்றார்.