“ ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற முன்மொழிவுடன் எதிர்காலத்தில் தேசிய அரசு அமைக்கப்படவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச தலைமையிலான எம்.பிக்கள் குழுவொன்று எதிரணிக்கு செல்லவுள்ளது எனவும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்கவுள்ளன எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எமது தரப்பில் அவ்வாறு எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஐக்கிய மக்கள் சக்தியை உடைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது, அதனால்தான் எமது கட்சியில் இருந்து பலர் இணைவார்கள் என்ற கதையும் பரப்பட்டுவருகின்றது. ஆனால் எமது அணியில் இருந்து எவரும் அந்த பக்கம் செல்லமாட்டார்கள்.
ஐக்கிய மக்கள் சக்திக்கென தெளிவானதொரு பொருளாதாரக் கொள்கைத் திட்டம் உள்ளது. அந்த கொள்கைக்கு இணங்கி செயற்படக்கூடியவர்கள் எமது பக்கம் வரலாம்.” –என்றார்.










