ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிழந்தமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன பிரதி பொலிஸ் மா அதிபர் திலகரத்னவிடம் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணையினை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் நிறைவடையும் வரை, குறித்த பிரதேசத்தில் அமைதியினை நிலைநாட்டுவதற்கு முப்படையினரின் உதவியை வழங்குமாறும் பாதுகாப்புச் செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைதியினை நிலை நாட்டும் வகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.