அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அத்துடன், புடின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைனில் போர் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது எனவும், புடினுடன் தனக்கு வலுவான புரிதல் உள்ளது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
‘ என்னை எப்போது சந்திக்க வேண்டுமென புடின் கருதுகிறாரோ அப்போது அவரை சந்திக்க நான் தயார். லட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நகரங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இது ஒரு மோசமான சூழ்நிலை. நமக்கு களத்தில் இருந்து கிடைக்கும் செய்திகளை காட்டிலும் உக்ரைனில் கூடுதலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதே நிஜம்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது தொடர்பாக விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறேன். அவர் அமைதியை விரும்புகிறார். இருந்தாலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண இரண்டு பக்கமும் பேச வேண்டியுள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.