” கடத்தல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளமை ராஜபக்சக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் ராஜபக்சக்களின் முகவராக பிள்ளையானுக்காக கம்மன்பில முன்னிலையாகியுள்ளார்.” என்று முன்னிலை சோசலிஷக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளரான புபுது ஜயகொட கூறியவை வருமாறு,
” கடத்தல் மற்றும் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் ராஜபக்ச ஆட்சிக்கு தொடர்புள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம். எமது கட்சி தோழர்களான லலித், குகன் ஆகியோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடனும் ராஜபக்சக்களுக்கு தொடர்புள்ளது.
இது தற்போது நிரூபனமாகிவருகின்றது. கடத்தல் விவகாரம் தொடர்பிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இது ராஜபக்சக்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சக்களின் முகவராகவே பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில செயற்படுகின்றது. ராஜபகச் மற்றும் பிள்ளையானுக்கிடையிலான தொடர்பாடலை ஏற்படுத்தவதே கம்மன்பிலவின் பணியாகும்.
உதய கம்மன்பில அண்மை காலங்களில் சட்டத்தரணியாக பெரிதாக செயற்படவில்லை. அப்படி இருக்கையில் தனது சட்டத்தரணியாக பிள்ளையான் அவரை தேர்வு செய்ததன் நோக்கம் தெளிவாகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவும் பிள்ளையானுடன் கதைப்பதற்கு அனுமதி கோரியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க என்பவரும் ராஜபக்சக்களின் அவதாரம் என்பது புரிகின்றது.” – என்றார்.