இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதே சமயம் உலகின் பெரிய நாடான ரஷ்யா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு அழைப்பில்லை ஏன்?
பிரிட்டன் ராணியாக 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் மறைந்தார். மறைந்த ராணியின் இறுதிச் சடங்கு 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்நிகழ்வில் உலக மக்களின் பிரதிநிதிகளாக , 500 நாடுகளின் மன்னர்கள், அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர். ராஜ குடும்பத்தினர் நடத்தும் இறுதிச் சடங்கு என்பதால், அரசராக பொறுப்பேற்ற மூன்றாம் சார்லஸுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகை புரியும் அனைவருக்கும், ராஜ குடும்ப முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என செய்திகள் வருகின்றன. லண்டன் நகரில் போக்குவரத்து நெரிசல், மக்களுக்கு பாதிப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படாத வகையில், வருகை புரியும் தலைவர்களுக்கு, தனியாக விமானம், ஹெலிகாப்டர், கார் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இறுதிச்சடங்கு அன்றும் தனி வாகனங்களை தவிர்த்து பொது வாகனங்கள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் வருகின்றன.
அதே சமயம் ரஷ்யா, பெலராஸ், மியான்மர் நாட்டு தலைவர்களுக்கு தற்போது வரை அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு காரணம் ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் என சொல்லப்படுகிறது. 2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதை எதிர்த்த பிரிட்டன் உக்ரைனுக்கு ஆதரவளித்தது.
ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் ரஷ்யா -பிரிட்டன் இடையே ராஜிய ரீதியில் பகைமை நிலவுகிறது.
இந்நிலையில், ரஷ்யா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினோ, அவர் சார்பில் வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மற்றுமொருவகையில் பல நூற்றாண்டுகளாக பூகோள ரீதியாக ரஷ்யா – பிரிட்டன் இடையே என்றும் மறைமுக பனிப் போர் நிலவி வருகிறது. இருந்தாலும் அவ்வவ்போது ரஷ்யாவும் – பிரிட்டனும் பெயரளவுக்கு கை கோர்க்கும். இந்நிலையில் ரஷ்யா -உக்ரைன் போரால் மீண்டும் பகைமை ஏற்பட்டுள்ளது.
பெலராஸ் நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, பெலாரஸ் வீரர்களை, ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து, உக்ரைன் ராணுவத்துக்கெதிராக போரிட வைத்தார். இதனால் பெலராஸ் நாட்டிற்கும் அழைப்பில்லை. இதைத் தவிர 70 ஆண்டுகளுக்கு மேல் ராணுவ ஆட்சியை நடத்தி, ஜனநாயகக் கோட்பாடுகளை கடைபிடிக்காமல், மனித உரிமை மீறல்களை நடத்தி வரும் மியான்மர் நாட்டிற்கும் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அழைப்பில்லை என தகவல்கள் வருகின்றன.
ராணியின் உடல் உள்ள சவப்பெட்டியின் மீது அவர் வழக்கமாக அணியும் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம், செங்கோல் வைக்கப்பட்டு இருந்தன. லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைக்கப்பட்ட ராணியின் உடலுக்கு, 3 நாட்களாக காத்திருந்து மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் பிரிட்டன் குடிமக்கள். வரும் 19ம் தேதி காலை 6.30 வரை மக்கள் அஞ்சலி செலுத்தலாம். 10 லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் எலிசபெத் ராணி அரியணையில் 70 ஆண்டுகள் இருந்தது வரலாற்றில் பெரிய செய்தி என்றால், ராணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உலகின் பெரிய நிலப்பரப்புடன், சுமார் 15 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்ய நாட்டிற்கு அழைப்பில்லை என்பதும் வரலாற்றில் முக்கிய செய்தியே!










