மாவனாவெல இராணுவ முகாமிற்கு சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் மூன்று கிலோ மான் இறைச்சியை கொண்டு சென்ற சாரதியான லான்ஸ் கோப்ரல் மற்றும் சிப்பாய் உள்ளிட்ட இருவரையும் போயா தினமான திங்கட் கிழமை (07) மதியம் மாதுறுஒய பூங்காவில் கைது செய்துள்ளதாக மாதுறுஒய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்தது.
சந்தேக நபர்களான இருவரும் மாவனாவெல இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய்களாவர். இவர்களை தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மாதுறுஒய பூங்காவின் பொறுப்பாளர் டீ.எஸ்.ஜயசோம ரத்ணாயக்க தெரிவித்தார்.
மாதுறுஒய ஹேனன்னேகலவில் இருந்து மாவனாவெல இராணுவ முகாமிற்கு இதற்கு முன்னரும் மான் இறைச்சி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஜயசோம ரத்ணாயக்க தெரிவித்தார். கடந்த (07) இராணுவ அம்பியூலன்ஸ் மூலம் மான் இறைச்சி கொண்டு செல்வதாக ஹேனன்னேகல வனவிலங்கு அலுவலகத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய உடனடியாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது அம்பியூலன்ஸ் மற்றும் மான் இறைச்சியுடன் சந்தேக நபர்களான இராணுவ சிப்பாய்கள் இருவரையும் கைது செய்ய முடிந்துள்ளதாக ஜயசோம ரத்ணாயக்க மேலும் தெரிவித்தார்.










