ஹிஷாலினி சிறுமி அல்லவாம்… யுவதியாம்… யுவதியாம்… யுவதியாம்!!!
யுவதியொருத்தியை வேண்டுமென்றே சிறுமி சிறுமி என்று கூறிக் கூறி திசைதிருப்பல் மேற்கொள்ளப்படுகிறதாம்… அரே பையா…. 18 வயதுக்குக் கீழ் என்றால் அவள் சிறுமிதான். சிறுமியை சிறுமி என்றுதான் எடுத்துரைக்க முடியும். யுவதி என்று சொல்லிவிட்டால் அவளுக்கு நடந்த அநீதி, இல்லை என்றாகிவிடுமோ?
யுவதி எரியுண்டுபோகலாமோ? அரே பையா…
சிறுமியொருத்தியை வேலைக்கமர்த்தியது மட்டுமே குற்றம்… அதுவே குற்றச்சாட்டு என்ற ரீதியிலேயே பேசுகிறீர்களே!
சரிவிடுங்கள்…. அவள் யுவதியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்… இங்கு கொந்தளிப்புக்குக் காரணம் அவளது அநியாய மரணம்!!! அதனோடு தொடர்புபட்டே ஏனைய விடயங்கள் பேசப்படுகின்றன.
இங்கு குற்றச்சாட்டு மரணம்! வலிமிக்க மரணம்! இயற்கைக்கு எதிரான மரணம்! உலகம் புரியா வயதில் ஏழ்மை காரணமாக பணிக்கு அமர்த்தப்பட்ட 16 வயதேயான ‘யுவதி’ எரியுண்டுபோன கொடூரம்!
பாலியல் கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவரை பணிக்கமர்த்தல் எல்லாம் அதனைத் தொடர்ந்து வருவன. இதில் சிறுமியை பணிக்கமர்த்தல் என்ற விடயத்தை மட்டுமே சபையில் முன்வைத்து, அல்ல.. அவள் சிறுமி அல்ல… யுவதி என்கிறீர்களே…?
முதன்மைக் காரணியை வசதியாக வேண்டுமென்றே மறந்துவிடுகிறீகளே… ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த மற்றுமொரு பெண், தனக்கு அவரின் மைத்துனரால் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக நேரடியாக குற்றஞ்சாட்டியிருக்கிறாரே.. அதைப்பற்றி பேச மாட்டீர்களோ?
சஜித்துக்காக அரும்பாடு பட்டாராம் ரிஷாட்.. ஆனால் சஜித் இப்போது நன்றிகெட்டுப் பேசுகிறாராம்.. அப்போ… அரும்பாடுபட்டவர் வீட்டில் சிறுமி ஒருத்திக்கு அநியாயம் நிகழ்ந்தால் அதைக் கேட்கவோ, விமர்சிக்கவோ, கண்டிக்கவோ கூடாதோ? அதற்குத்தான் அரசியல் கூட்டணிகள் ஏற்படுத்தப்படுகின்றவோ?
உனக்கு நான் உதவி… இக்கட்டில் எனக்கு நீ உதவி என்று, நீங்கள் என்ன பாவம் செய்தாலும் உங்களுக்கு காவடி எடுக்க வேண்டுமோ? தூயவர் என்று போற்ற வேண்டுமோ? உலகில் யாருமே உத்தமரல்லர். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்பேர்ப்பட்டவரையும் குற்றமிழைக்க வைக்கும். ஆகவே ஹிஷாலினி விடயத்தில் உண்மை நிரூபிக்கப்படும்வரை சந்தேக நபர்களை ஆதரித்துப் பேசுவது ஒரு அரசியல் தலைவனுக்கு இழுக்கு என்பது தெரியாதவர்களா நீங்கள்?
ஒரு குற்றம் நிகழ்ந்து அந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டால், அந்த குற்றத்தின் உண்மைத்தன்மை நீதிமன்றத்தில் ஆராயப்பட்டு, உண்மைக் குற்றவாளி என்பவர் அடையாளப்படுத்தப்படும்வரை, சந்தேக நபர் சந்தேக நபர்தான். நீங்கள் பதவிக்கு வர அவர்தான் உதவி செய்தவர், அவரை குற்றஞ்சாட்டுதல் இறைவனுக்கே அடுக்காது என்று கூவுவதெல்லாம். என்ன கூத்து? எனது நண்பன் ஒருவன் குற்றமிழைத்தால் அவன் குற்றவாளி என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவன் எனது நண்பன் என்பதற்காக அவன் செய்யும் அநியாயங்களையெல்லாம் பொறுத்துக்கொள்ளச் சொன்னால் பரவாயில்லை… அவன் குற்றமே செய்யாதவன் என்று பறைசாற்றும்படியல்லவா கேட்கிறார்கள். குற்றவாளியோ சுத்தவாளியோ… நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். அதிகாலை நேரத்தில் உயிரோடு உடல் கருகிய அந்த இளம் சிறுமி (சிறுமியேதான்) அனுபவித்த வேதனையை ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால்… நிச்சயம் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியவன் அவன் யாராக இருந்தாலும்! உங்கள் கூற்றுப்படி நீதி ஜெயிக்கும். இறைவன் பார்த்துக் கொள்வான். அப்புறம் பேசுவோமே.
உங்கள் தலைவர் பல நல்ல விடயங்களை செய்திருக்கலாம்… ஆனால் குற்றமே இழைக்காதவர், உலகமகா சுத்தவாளி, கறைபடா உள்ளம் கொண்டவர் என்பதெல்லாம் நியாயமாரே…? மீண்டும் கூறுகிறேன்… உலகில் யாருமே உத்தமரல்லர். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்பேர்ப்பட்டவரையும் குற்றமிழைக்க வைக்கும். குற்றமிழைத்தாரா இல்லையா என்பது நிரூபிக்கப்படும்வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும்.
ஹிஷாலினி மரணம் அரசியலாக்கப்பட்டுவிட்டது என்று கூவுகிறீர்களே… நீங்களல்லவா அதனை முஸ்லிம் சமூகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாக திசைதிருப்பியுள்ளீர்கள்? ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. அது முஸ்லிம் ஒருவரது வீட்டில் நிகழ்ந்துள்ளது. வீட்டார் சந்தேகத்தின்பேரில் கைது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை இடம்பெறுகிறது. வீட்டார்மேல் பிழை இல்லையெனின் விடுவிக்கப்படுவார்கள். அவ்வளவுதான். அதை எதக்கு மொத்த முஸ்லிம் சமூகத்துக்குமே எதிரான குற்றச்சாட்டாக பார்கிறீர்கள்? அவர் அதைச் செய்தார்… இதைச் செய்தார்… அவ்வளவு நல்லவர்… இவ்வளவு பெரியவர் என்று மாய்ந்து மாய்ந்து அங்கலாபிப்பது எதற்காக? மீண்டும் கூறுகிறேன் உலகில் யாருமே உத்தமரல்லர். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்பேர்ப்பட்டவரையும் குற்றமிழைக்க வைக்கும்.
அடுத்ததாக மனோ கணேசன்… மனோ கணேசனுக்கும் ரிசாட்டுக்கும் அரசியலில் பல கொடுக்கல் வாங்கல்கள் இருந்ததாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு அவரும் இப்போது கூவுகிறாராம்…! உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றஞ்சாட்டியதற்கே நீங்கள் இவ்வளவு கூவு கூவுகிறீர்களே… மனோ கணேசன் சமூகத்தை சேர்ந்த சிறுமியொருத்தி எரியுண்டுபோனாள். பிஞ்சு உயிர் போயே போய்விட்டது. அவளுக்காக அவர் பேசக்கூடாதோ? கூவக்கூடாதோ?
அடுத்தது தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான குற்றச்சாட்டு. இல்லாத ஒன்றுக்காக சமூக அங்கீகாரம் பெற்ற தனிப்பட்ட ஒரு குடும்பத்தை தமிழ் ஊடகவியலாளர்கள் குறிவைக்கிறார்களாம். மனசாட்சி, தொழில் தர்மம் இன்றி பொய்யாய் எழுதித் தள்ளுகிறார்களாம்? ஏனப்பா? அப்பிடியோ? ரிஷாட் பதியுதீன் என்கின்ற தனிநபர், ஒட்டுமொத்த முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக நினைத்து, சகல செய்திகளும் முஸ்லிம் சமூகத்தைக் கேலி செய்வதாக இருப்பதாக குற்றச்சாட்டு. ஹிஷாலினி சம்பந்தமாக நாம் பார்க்கும் செய்திகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வம்பிழுப்பதாக எமக்குத் தென்படவில்லை நல்லிணக்க நலன் விரும்பிகளே! ரிஷாட் வீட்டில் இருந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதைப்பற்றி மட்டுமே பேசப்படுகிறது. நீங்கள்தான் அதை முழு முஸ்லிம் சமூகத்துக்கானதுமாக மாற்றிப் பார்க்கிறீகள். ஹிஷாலினிக்கு நிகழ்ந்த அநீதி… ஒரு பாத்திமாவுக்கு நடந்திருந்தாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் எழுதியிருப்பார்கள் என்பதை அவர்களே மூச்சுமுட்ட சொல்லிச் சொல்லிக் களைத்துவிட்டார்கள்.
ஹிஷாலினி 16 வயதுக்கு முன் எங்கெல்லாம் வீட்டு வேலை செய்தார்? பாடசாலையிலிருந்து ஏன் விலக்கப்பட்டார்? இதுபற்றி ஏன் சமூக ஆர்வலர்கள் பேசவல்லை? உங்களுக்குத் தேவை ரிஷாட் மட்டும்தான். அவரை குற்றஞ்சாட்டுவது மட்டும்தான் என்கிறீர்கள். ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கேட்பதே.. இனி இவ்வாறு நிகழக் கூடாது என்பதற்காகத்தானே! இனி சிறுவர்கள் பாடசாலையிலிருந்து இடைநடுவில் நின்றால் கேள்வி கேட்கப்படும் என்றுதானே! இனி யாரும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதற்காகத்தானே!! ஹிஷாலினியின் மரணத்துக்கான நீதி அவை எல்லாவற்றையும் பேசும்!
கவனித்துப் பார்த்தால்….. வேறொரு சமூகத்தை சேர்ந்த ஒருவன் அவன் பௌத்தனோ, தமிழனோ, கிறிஸ்துவனோ… மிக மிகக் கேவலமான குற்றச்செயல் புரிந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும்கூட அவரை தனிநபராகத்தான் சமூகம் பார்க்கும். அவனது சமூகம் உட்பட. துஷ்டனைக் கண்டால் தூர விலகத்தான் வேண்டும். கூட்டணி சேர்த்துக் கும்மியடிக்கக் கூடாது.
ஐயாமாரே… அண்ணன்மாரே.. தம்பிமாரே… ரிஷாட் என்பவர் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பாற்பட்டு நீதிமானாகவே இருக்கட்டும். அவரது வீட்டில் அவரது பொறுப்பில் இருந்த ஒரு சிறுமி கொடூர மரணமடைந்துள்ளார். அதற்குப் பதில் சொல்ல வேண்டியது அவர்தான். சமூகப் பொறுப்பு வாய்ந்த, சமூகத்துக்காய் பாடுபடுகின்ற, அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஒருவர்… மக்கள் பிரதிநிதியாய்… ஹிஷாலினியின் மரணத்துக்கு பதில் கூற வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.
சிறுமி ஹிஷாலினியின் மரணம் சமூக அடையாளங்களைத் தாண்டி அணுகப்பட வேண்டும். இலங்கையின் எதிர்கால சிறுமிகளைப் பாதுகாப்பதற்காக இப்போதே எடுக்க வேண்டிய நடவடிக்கை இது. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் வேலைக்கு அமர்த்தும் பெரியோருக்கும் அதற்கான தண்டனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இனிமேல் வேறு ஹிஷாலினிகள் உருவாகிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான பாதையை ஹிஷாலினி உருவாக்கிச் சென்றுள்ளாள். கிடைக்கும் நீதி அவளுக்கானது மட்டுமல்ல… இலங்கையின் எதிர்காலத்துக்குமானதுதான்!!! ஆகவே சற்றுப் பொருங்கள்… நீதிமன்றம் தன் கடமையை செய்யட்டும்!!!
– குருவிக்கு வந்த மடல்