பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகள், சம்பள அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து, மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்யுமாறும் கோரி 21 தோட்டக் கம்பனிகளினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதிலும், தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கவில்லை.
இதனையடுத்தே பெருந்தோட்டக் கம்பனிகள் உயர்நீதிமன்றத்தை நாடின.