” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பு தெரிவித்தால் போராட்டம் தொடரும்.” – என்று இதொகாவின் தேசிய அமைப்பாளரான ஏ.பி. சக்திவேல் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ சம்பள நிர்ணயசபை ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. தொழிற்சங்கங்களின் சார்பில் ஆயிரத்து 700 ரூபா சம்பளம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி தொழில் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. இதனை நாம் கண்டிக்கின்றோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளோம்.
பெருந்தோட்டக் கம்பனிகள் ஆயிரத்து 700 ரூபா வழங்க மறுக்குமானால் போராட்டம் தொடரும்.
சம்பள உயர்வு விவகாரத்தில் சம்பள நிர்ணயசபை மற்றும் தொழில் அமைச்சு ஊடாக அரசு எமக்கு நேசக்கரம் நீட்டியுள்ளது.” – எனவும் இதொகாவின் தேசிய அமைப்பாளர் குறிப்பிட்டார்.