பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நீதிமன்றத்தை பொறுத்தவரையில் சட்ட சிக்கல் காணப்படுவதனால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு மாத காலப்பகுதிக்குள் இப்பிரச்சினையை முடிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதற்காக தொழிற்சங்க தலைமைகளும், அரசியல் தலைமைகளும் பட்டாசு கொளுத்தி சந்தோசப்படாமல், முதலை கண்ணீர் வடிக்காமல் ஒற்றுமையாக இருந்தால் போதும்.
நாங்கள் சொல்வதையே செய்வோம், கடந்த 2020 ஆம் ஆண்டு கூறியது போல் 1000ரூபாவினை பெற்றுக்கொடுத்தோம், தற்போது ரூபா 1700 வை பெற்றுத்தருவதாக கூறியிருந்தோம். அதனையும் பெற்றுக்கொடுப்போம்.
எங்களை பொறுத்த வரையில் முதல்சுற்றில் நாங்கள் வெற்றிப்பெற்றோம், இரண்டாவது சுற்றில் அவர்கள் (கம்பனிகள்) வெற்றிப்பெற்றார்கள், ஆகவேதான் மூன்றாவது சுற்றில் நாங்கள் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.