தமக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதற்கு மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டுடன் அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் என நாளொன்றுக்கான சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படவுள்ளது. மேலதிகமாக பறிக்கப்படும் பச்சைக்கொழுந்து கிலோவுக்கு 80 ரூபா வழங்கப்படும்.
இந்நிலையில் சம்பள உயர்வுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கந்தப்பளை பார்க் தோட்டம், ராகலை டெல்மார்க் மேல்பிரிவு ஆகிய தோட்டங்களில் இதொகாவின் தோட்ட கமிட்டி ஏற்பாட்டில் இன்று காலை பூஜை வழிபாடு இடம்பெற்றது.
அத்துடன், பட்டாசு கொளுத்து, பாற்சோறு சமைத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்பின்னரே தொழிலுக்கு சென்றனர்.

