சம்பள விடயத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்க;க்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே முதலாம் திகதி கொட்டகலையில் வைத்து அறிவிப்பு விடுத்தார்.
அதுமட்டுமல்ல அரச பெருந்தோட்டங்களில் சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் அதுவும் நடக்கவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.
கம்பனிகள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று இடைக்கால தடை உத்தரவை வாங்கியிருக்கின்றமை மலையகத்தை பிரதிநிதித்துவப்படும் பிரதிநிகள் என்ற வகையில் மன வருத்தம் அளிக்கின்றது.
இனியாவது பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள விடயத்தில் தன்னிச்சையாக செயற்பாடாமல் அனைவரையும் இணைத்துக்கொண்டு கம்பனிகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை உருவாக்கப்பட வேண்டும் . பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு அரசாங்கம் ஒரு நிலையான முடிவெடுக்க வேண்டும்.’’ என்றார்.
